புதன், 5 ஜனவரி, 2011

5. நாதமென்னும் கோவிலிலே

 This is a reproduction of my post in msvtimes.com/forum on April 16, 2010


MSVtimes  arranged a unique programme "Naadhamennum Kovilile", bringing out the nuances, intricacies and several subtle dimensions of the compositions of Mellisai Mannar.  Sai Kumar's Sai Sangeeth Prakruthi was the music troupe.. The Programme was held on 14.04.2010 at Sir Pitti. Thyagarajar Kalai Arangam, G.N. Chetty Road, T.Nagar, Chennai -17.

A review of this program:
ஆங்கிலத்தில் 'first things first' என்பார்கள். எனவே ஒரு வேண்டுகோளுடன் துவங்குகிறேன். வேண்டுகோள், முரளி மற்றும் வத்ஸனின் குடும்பத்தினர்க்கு. முதலில் முரளி, வத்ஸன்  இருவருக்கும் திருஷ்டி சுற்றிப் போடுங்கள். ஏனெனில், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பேரையும் இந்த இரட்டையர் கவர்ந்து விட்டார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. திருஷ்டி கழிக்கும் முகமாக நானே சில குறைகளையும் குறிப்பிடப் போகிறேன் என்பது வேறு விஷயம்!

முதலில், நிகழ்ச்சியில் அலசப்பட்ட பாடல்களின் பட்டியலைக் கொடுத்து விடுகிறேன். இதை என் நினைவிலிருந்து எழுதுவதால், ஒரு சில பாடல்கள் விட்டுப் போக வாய்ப்பு உண்டு. வரிசையிலும் மாற்றம் நேர்ந்திருக்கும்.

1) இறை வணக்கம் - ஆயிரம் கரங்கள் நீட்டி - கர்ணன்
2) நீராடும் கடலெடுத்த - தமிழ்த் தாய் வாழ்த்து
3) தமிழுக்கும் அமுதென்று பேர் - பஞ்ச வர்ணக்கிளி
4) புல்லாங்குழல் கொடுத்த - கிருஷ்ண கானம்
5) அன்பே வா - அன்பே வா
6) அழகிய தமிழ் மகள் இவள் - ரிக் ஷாக்காரன்
7) என்ன வேகம் நில்லு பாமா - குழந்தையும் தெய்வமும்
8)  நான் நன்றி சொல்வேன் - குழந்தையும் தெய்வமும்
9) அடடா என்ன அழகு - நீ
10) வெள்ளிமணி ஓசையிலே - இரு மலர்கள்
11) மதுரா நகரில் - பார் மகளே பார்
12) சிரித்தாள் தங்கப் பதுமை - கண்ணன் என் காதலன்
13) ஆறோடும் மண்ணில் - பழனி
14) என்னுயிர்த் தோழி - கர்ணன்
15) உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
16) சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் - ராமன் எத்தனை ராமனடி
17) எங்கிருந்தோ ஆசைகள் - சந்திரோதயம்
18) கேள்வியின் நாயகனே - அபூர்வ ராகங்கள்
19) வேலாலே விழிகள் - என்னைப் போல் ஒருவன்

ஒவ்வொரு பாடலும் தேர்வு செய்யப்பட்டதற்கு ஒரு காரணம் உணடு. ஒவ்வொரு பாடலின் சிறப்பையும் முரளியும், வத்ஸனும் எந்த அளவுக்கு எளிமையாக விளக்க முடியுமோ அந்த அளவுக்கு எளிமையாக விளக்கினார்கள் என்பதை அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள். குறிப்பாக, தாங்கள் சொல்லும் விஷயம் சரியாக எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதில் முரளி சற்று அதிக அக்கறையும், முயற்சியும் எடுத்துக் கொண்டார் என்று தோன்றியது. வத்ஸனின் இயல்பான உரையாடலும், நகைச்சுவை உணர்வும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இருப்பினும், எளிய தமிழில் சரளமாகப் பேசும் திறன் படைத்த நண்பர் வத்ஸன், ஆங்கிலச் சொற்களைப்  பயன்படுத்தியதைச் சற்று குறைத்துக் கொண்டிருக்கலாம் என்பது என் கருத்து.

துவக்கத்தில், விளக்கங்கள் சற்று நீளமாகவே இருந்தன. இசை பிறந்தது எப்படி, அன்பே வா பாடலுக்கான விளக்கம், எப்படி மெல்லிசை மன்னர் chordsஐப் பயன்படுத்தி, கர்நாடக ராகங்களில் மேற்கத்திய இசையைப் புகுத்தி, அவற்றை மெல்லிசை ஆகுகிறார் போன்ற விளக்கங்கள் எவ்வளவு பேருக்குப் புரிந்திருக்கும் என்பதுடன், இந்த விளக்கத்தின் பயன் (purpose) என்ன என்பதும் எனக்குப் புரியவில்லை.

பல பாடல் விளக்கங்கள் மிக அருமையாக அமைந்து ரசிகர்களைக் கவர்ந்தன என்பதை அவர்களின் அனிச்சையான கரவொலியே வெளிப்படுத்தியது. குறிப்பாக, 'நீராடும் கடலெடுத்த' பாடலுக்கு ஏன் மெல்லிசை மன்னர் 'மோகனத்தைத்' தேர்ந்தெடுத்தார், 'தமிழுக்கும் அமுத்தென்று பேர்' பாடலின் முத்தாய்ப்பான வரிகளை எப்படி கவிஞர் பாரதிதாசனின் உணர்வுகள் வெளிப்படும்படி இசை அமைத்தார், 'அழகிய தமிழ் மகளின்' துவக்கத்தில் வரும் இசை எப்படி நினைவுகள் உள்ளடங்கிக் கனவு மலர்வதைப் பிரதிபலிக்கிறது, 'மதுரா நகரின்' முதல் இரண்டு சரணங்களின் இணைப்பிசை ஒரே மாதிரி இருப்பதும், மூன்றாவது சரணத்தின் இணைப்பிசை வேறு விதமாகவும் இருப்பது ஏன், ராகமாலிகையில் அமைந்த 'கேள்வியின் நாயகனே' பாடலின் நுணுக்கங்கள், குறிப்பாக, கடைசிச்சரணம் மத்தியமாவதியில் அமைந்திருப்பதின் காரணம் போன்றவற்றை இவர்கள் விவரித்ததை ரசிகர்கள் வியப்புடனும், உற்சாகத்துடனும், ஆனந்ததுடனும் ரசித்ததை, ஒரு பார்வையாளனாக என்னால் பக்கத்தில் இருந்து பார்க்க முடிந்தது.

ஆயினும் என்னைப் பொறுத்தவரை ஒரு ஏமாற்றம். 'சித்திரை மாதம்' பாடலை சிறப்பாக விளக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், (ரயில் சத்ததை ஏற்படுதுவதற்காக) உப்புக் காகிதம் தேய்க்கும் உத்தியை எம் எஸ் வி 1954இல் வந்த போர்ட்டர் கந்தன் படத்திலேயே துவங்கி விட்டார் என்று குறிப்பிட்டது, இந்தப் பாடலின் பிரமிக்கத்தக்க இசை முயற்சிக்கு நியாயம் செய்வதாக இல்லை.

அதிகம் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், நிகழ்ச்சியை மிக நீளமாக அமைத்து விட்டார்களோ என்று தோன்றியது. மாலை ஆறு மணிக்கு முன்பு இது போன்ற நிகழ்ச்சிகளைத் துவக்குவது நடைமுறையில் சாத்தியமில்லை. ஒன்பது மணிக்கு மேல் நிகழ்ச்சி தொடர்ந்தால், சொந்த வாகன வசதி இல்லாதவர்களுக்கு சிரமமாக இருக்கும். இசை நிகழ்ச்சிகளுக்கு நூறு, இருநூறு என்று கட்டணம் செலுத்தி ரசிக்க முடியாத பல கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் இது போன்ற நிகழ்ச்சிக்கு ஆர்வமாக வருவார்கள். இனி வரும் நிகழ்ச்சிகளை ஒன்பது மணிக்கு நிறைவு செய்யும் விதமாகத் திட்டமிடலாம் என்பது எனது கருத்து.

இசைக்குழுவினரின் முயற்சி பாராட்டுதற்குரியது. குறிப்பாக, வழக்கமாகப் பாடப் படாத பல பாடல்களைப் பயிற்சி செய்து நிகழ்ச்சியில் இடம் பெறச் செய்ததைப் பாராட்ட வேண்டும். ஆரம்பத்தில் சில பாடல்களில் தாள வாத்திய்ங்களின் தொனி சற்று தூக்கலாக இருந்ததாக எனக்குத் தோன்றியது. 'மதுரா நகரில்', 'என்னுயிர்த்தோழி' போன்ற கடினமான பாடல்களைத் தவிர்த்து மற்ற பாடல்களில் இசைக்குழுவினரின் பங்கேற்பு மிகச் சிறப்பாகவே இருந்தது.

கோவை முரளியும், ஜெயஸ்ரீயும் இவ்வளவு உற்சாகமாகப் பாடியதை இதுவரை நான் பார்த்ததில்லை. நமது உறுப்பினர்கள் திரு சம்பத்தின் குமாரி அர்ஷிதா ('சித்திரை மாதம்'), திரு சுந்தரராஜனின் புதல்வி தாரிணி ('வெள்ளி மணி') ஆகியோரும் சிறப்பாகப் பாடலை அனுபவித்துப் பாடினார்கள். 'ஆறொடும் மண்னின்' பாடலில் சீர்காழியின் வரிகளை பாடுவதற்காகத் திருவண்ணாமலையில் இருந்து வந்த விவசாயியும் அருமையாகப் பாடினார்.

வைத்தியின் அறிமுக உரை, பேராசிரியர் ராமனின் முகவுரை மற்றும் நன்றியுரை, திரு சுதாங்கனின் சிற்றுரை, சென்னைத் தமிழ்ச் சங்கம் திரு ப.லக்ஷ்மணனின் பாராட்டுரை, எம் எஸ்வியின் வாழ்த்துரை போன்ற மற்ற பல விஷயங்களையும் விரிவாக எழுதினால் இந்தக் கட்டுரை இன்னும் நீண்டு விடும் என்பதால், இவற்றைக் குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

'நாதமெனும் கோவிலிலே' என்பது நிகழ்ச்சியின் பெயர். இந்தப் பாடலின் அடுத்த வரி,
'ஞான விளக்கேற்றி வைத்தேன்'
என்பதாகும்.

முரளியும், வத்ஸனும், 'நாதமெனும் கோவிலிலே (மூலம்) (ஒரு) ஞான விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார்கள். இந்த விளக்கின் ஒளி சிலருக்கு இசை தெய்வத்தின் அழகைக் கொஞ்சம் கோடிட்டாவது காட்டியிருக்கும். எதிர்காலத்தில், இந்த விளக்கின் சுடரிலிருந்து மேலும் பல விளக்குகள் ஏற்றப்பட்டு, இந்த இசை ஆலயம் ஒளிப்பிழம்பாகக் காட்சி அளிக்கலாம்.

கோவிலில் விளக்கு ஏற்றுவது இறைவனுக்கு வெளிச்சம் வேண்டும் என்பதற்காக அல்ல. கருவறையின் இருட்டில் இருக்கும் இறைவனின் திருவுருவைத் தரிசிக்க நமக்கு ஒளி வேண்டும் என்பதற்காக. இந்த நிகழ்ச்சிக்கு 'நாதமெனும் கோவிலிலே' என்று அருமையான பெயர் அமைந்தது ஒரு அற்புதமான விஷயம்.


கடைசியாக ஒரு வார்த்தை. கட்டுரையின் முதல் வரியை மீண்டும் படியுங்கள்.
நன்றி!

 You can view the video of one song presented in the program.
வெள்ளிமணி ஓசையிலே 


Visit 
MSV Times

1 கருத்து:

  1. அன்பிற்கினியவரே..

    அரிய இப்பிறவியில் யான் பெற்ற இன்பமெல்லாம் கண்ணதாசன் கவிநயமும் மெல்லிசை மன்னரின் இசைநயமும் ஒருசேர என் இதயம் எல்லாம் நிறைத்ததுவே!

    வார்த்தை வழங்கிய வள்ளல் முகத்தை நேரில் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை எனினும் இசையின் வடிவமாய் வாழ்கின்ற மெல்லிசை மன்னரின் இதயத்தில் இடம்பெற்றவன் என்னும் பெருமை உண்டு.

    உலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு கவிஞனுக்கு ஒரு இசை அமைப்பாளன் சிலை எடுத்தது என்னும் புதிய சரித்திரம் துவங்கிய இடம்.. பம்மல்..

    உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.
    எனது மின்னஞ்சல் முகவரியில் வாருங்கள்.

    --

    என்றும் அன்புடன்,
    காவிரிமைந்தன்
    (மு.இரவிச்சந்திரன்)
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
    சென்னை 600 075
    தற்போது - ருவைஸ், அபுதாபி..
    00971 50 2519693
    kmaindhan@gmail.com

    பதிலளிநீக்கு