புதன், 5 ஜனவரி, 2011

14. விஸ்வராமாயணம்

ஆழ்வார்களின் பாசுரங்களிலிருந்து ஆங்காங்கே  வரிகளையும், வார்த்தைகளையும் எடுத்து அவற்றைத் தொகுத்துப் பாசுர ராமாயணம் என்ற பெயரில் செய்யுள் வடிவில் அமைந்த ஒரு சுருக்கமான ராமாயணத்தை உருவாக்கியிருக்கிறார் பெரியவாச்சான் பிள்ளை என்ற வைணவ ஆச்சாரியர்.

அது போல் எம் எஸ் வி இசை அமைத்த திரைப்படப் பாடல் வரிகளிலும் ராமாயணம் முழுவதும் வருகிறது என்பது ஒரு வியப்பான விஷயம்!

ராமாயணத்தில் ஏழு காண்டங்கள் உண்டு. இந்த ஏழு காண்டங்களையும் குறிக்கும் பாடல்கள் எம் எஸ் வியின் பாடல்களில் உண்டு! 

ஏழாவது காண்டமான உத்தர காண்டம் சீதை காட்டுக்கு அனுப்பப்பட்டது, ராமர், சீதை அனைவரும் அவதாரம் முடித்து இவ்வுலகை விட்டு நீங்கியது போன்ற விஷயங்களை விவரிப்பதால், ராமாயணம் சொல்பவர்களும், படிப்பவர்களும் ஆறாவது காண்டமான யுத்த காண்டத்தோடு முடித்துக் கொள்வார்கள். உத்தர காண்டத்தைத் தவிர்த்து விடுவார்கள். ஒருவேளை உத்தர காண்டத்தைப் படித்து விட்டால், மீண்டும் பால காண்டத்தில் ராமாவதாரத்தைப் படிக்க வேண்டும் என்பது ஒரு மரபு.

எம் எஸ் வியின் இசை வீச்சுக்கு உத்தர காண்டமும் தப்பவில்லை. எனவே, உத்தர காண்டத்தில் துவங்கி யுத்த காண்டத்தில் முடிக்கிறேன். 

காட்டில், வால்மீகி ஆசிரமத்தில், லவ குசர்கள் பிறந்து, வால்மீகியிடம் ராமாயணம் கற்று, ராமன்தான் தங்கள் தந்தை என்று அறியாமலே ராமாயணத்தைப் பாடிப் பரப்புகிறார்கள் ('லவ குசா' திரைப்படத்தில், லவ குசர்கள் பாடுவதாக, 'ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே' என்ற அற்புதமான ஒரு பாடல் வருகிறது.  மருதகாசி எழுதிய இந்தப் பாடலுக்கு இசை கே வி மகாதேவன், கண்டசாலா.)

 எனவே, உத்தர காண்டத்தில் ராமாயணம் துவங்கப் படுவதில் தவறில்லை என்று கருதுகிறேன்.

உத்தர காண்டம்: (உத்தரம் என்றால் முடிவு, மறைவு என்று பொருள்.)
(யாரோ சொன்ன அவச்சொல்லைக் கேட்டு, ராமன் சீதையைக் காட்டில் கொண்டு விட்டதையும், சீதை வால்மீகியின் ஆசிரமத்தில் தங்கி லவ குசர்களை ஈன்றதையும், லவ குசர்கள் வால்மிகியிடம் ராமாயணம் பயின்று, ராமகாதையைப் பாடிப் பரப்பியதையும், அஸ்வமேத யாகம் செய்த ராமன், லவ குசர்களுடன் போரிட நேர்ந்து, பின்பு அவர்கள் தன் புதல்வர்கள்தான் என்று அறிந்ததையும், அவர்களுக்கு முடி சூட்டி விட்டுக் கானகம் சென்று, சரயு நதியில் மூழ்கி இவ்வுலகை விட்டு அகன்றதையும், அவ்வாறே ராமனின் மூன்று தம்பிகளும் மறைந்ததையும், பூமி பிளந்து தன் மகளான சீதையைத் தனக்குள் அழைத்துக் கொண்டதையும் உத்தர காண்டம் விவரிக்கிறது.)

ண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகிறது
அது பாசமன்றோ?

('அம்மம்மா தம்பி என்று நம்பி' - ராஜபார்ட் ரங்கதுரை)

கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
சுவைக் கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகி
மானிடத்தைத் தேடி இன்று போகிறாள்
தன் மணவாளன் கட்டளையால் ஜானகி

தேடி வந்த மாளிகையில் ஆதரவில்லை
அவள் தேர் செல்லும் பாதையில் தெய்வமும் இல்லை
பாவை அவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை
தன் பாவம் இல்லை என்று சொல்ல ஒரு வார்த்தையும் இல்லை

ஊமை கண்ட கனவை அவள் யாரிடம் சொல்வாள்
இன்று ஊர் சொல்லும் வார்த்தையில் வேறிடம் செல்வாள்

('கானகத்தைத் தேடி' - கொடி மலர்)

ராமநாமம் தந்த ராகம்
லவனாகக் குசனாக உருவான கீதம்
(மல்லிகை முல்லை - அண்ணன் ஒரு கோயில்)

பால காண்டம்:
(ராம, லட்சுமண, பரத சத்துருக்குனர் பிறப்பு, ராம லட்சுமணர் விஸ்வாமித்திரருடன் கானகம் சென்று முனிவர்களின் யாகத்தைக் காத்தது, மிதிலை சென்று வில்லை முறித்து ராமன் சீதையை மணமுடித்து அயோத்தி திரும்புதல்)

வம்சத்துக்கொருவன் ரகுராமன்

ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி 

('ராமன் எத்தனை ராமனடி? - லக்ஷ்மி கல்யாணம்)


மிதிலா நகரில் ஒரு மன்றம்
பொன் மேனியில் ஜானகி தங்கம்
மணிமாடத்திலே வந்து தோன்றும்
மனம் மன்னவன் எண்ணத்தில் நீந்தும்
ஸ்ரீராமனைக் கண்டது மனமே
பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே

('மதுரா நகரில்' - பார் மகளே பார்)

ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் 
ராஜாராமன் நினைத்திருந்தான்
அவள் சுயம்வரம் கொள்ள மன்னவர் சிலரும் மிதிலைக்கு வந்திருந்தார் -
மிதிலைக்கு வந்திருந்தார் .

மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்
இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க ராமனைத் தேடி நின்றாள்
நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம் கவலை ஒருபுறம்
அவள் நிலைமை திரிபுறம்


கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து மணியும் கருகியதே
அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே

நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை
அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை


முனிவன் முன்புறம் ஸ்ரீராமன் பின்புறம்
சீதை தனியிடம் அவள் சிந்தை அவனிடம்

மன்னவர் எல்லாம் சுயம்வரம் நாடி மண்டபம் வந்து விட்டார்.
ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கி விட்டாள்
ஜானகி கலங்கி விட்டாள்.

('ஜனகனின் மகளை' - ரோஜாவின் ராஜா)

சீதைக்கேற்ற ராமனோ?
('ராதைக்கேற்ற கண்ணனோ?' - சுமைதாங்கி)

வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தா
ளோ?

மையிட்ட கண்ணொடு மான் விளையாட
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ - அங்கே
தேவர்கள் யாவரும் திருமண மேடை அமைப்பதைப் பார்த்திருந்தாரோ திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர் காவலில் நின்றிருந்தாளோ - தேவி
வைதேகி காத்திருந்தாளோ?


பொன் வண்ணமாலை ஸ்ரீராமன் கையில் மூவரும் கொண்டு தந்தாரோ அங்கே
பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
மங்கையை வாழ்த்த வந்தாரோ தேவி
சீருடன் வந்து சீதனம் தந்து
சீதையை வாழ வைத்தாரோ தேவி

('வசந்தத்தில் ஓர் நாள்' - மூன்று தெய்வங்கள்)

கல்யாணக்கோலம் கொண்ட கல்யாண ராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்

('ராமன் எத்தனை ராமனடி? - லக்ஷ்மி கல்யாணம்)


ஸ்ரீராமன் ஜானகியின் திருமுகத்தைப் பார்த்திருந்தான்
இன்றுவரை  அழியாமல் இதயங்கள் மீதே வாழ்கின்றான் 
 ('ஒருவனுக்கு ஒருத்தி என்று' - தேனும் பாலும்)

அயோத்யா காண்டம்:
(தசரதன் ராமனுக்கு முடி சூட்டத் தீர்மானித்தது, கைகேயியின் பிடிவாதத்தால் ராமன் லட்சுமணன் சீதையுடன் காட்டுக்குச்சென்றது )

தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்

('ராமன் எத்தனை ராமனடி? - லக்ஷ்மி கல்யாணம்)

மந்தரையின் போதனையால் மனம் மாறிக் கைகேயி
மஞ்சள் குங்குமம் இழந்தாள்

('ஒற்றுமையால் வாழ்வதாலே' - பாகப்பிரிவினை)

ராம நாடகத்தில் மூன்று தம்பியரின் உள்ளம் கண்டேனே
('அம்மம்மா தம்பி என்று நம்பி' - ராஜபார்ட் ரங்கதுரை)

மாலை சூடி வாழ்ந்த வேளை
வனவாசம் போனாலும் பிரியாத சீதை

('மல்லிகை முல்லை' - அண்ணன் ஒரு கோவில்) 


மகனைப் பிரிந்து தசரதன் மாண்டான் 
மன்னவன் ராமன் வனம் சென்றான் 
பரதன் கண்ணீர் கமிகையில் நீந்தி
பாதுகையுடனே முடி கொண்டான்.

('இறைவா உனக்கொரு கேள்வி' - அன்னையும் பிதாவும்) 

ஆரண்ய காண்டம்:
(ராமன் சீதை லட்சுமணன் இவர்களின் காட்டு வாழ்க்கை, ராவணன் சீதையை அபகரித்துச் சென்றது)

ஜானகிராமன் காட்டினில் திரிஞ்சான்
பாதியில்தானே சீதையைப்  பிரிஞ்சான்  
('போடச்சொன்னால் போட்டுக்கறேன்' - பூவா தலையா)

கோடு போட்டு நிற்கச் சொன்னால் சீதை நிற்கவில்லையே
சீதை அன்று நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே!

('அடி என்னடி உலகம்' - அவள் ஒரு தொடர்கதை) 

ஆண்மகன் வகுத்த எல்லையைக் கடந்து நடந்தாள் ராகவன் தலைவி 
(நான் என்றால் அது அவளும் நானும் - சூரியகாந்தி)

கிஷ்கிந்தா காண்டம்:
(ராமன் சுக்ரீவன், அனுமனைச் சந்தித்தது, வாலியை வதம் செய்தது)

அவர்களைச் சேர்க்க  அனுமான் பறந்தான்
('போடச்சொன்னால் போட்டுக்கறேன்' - பூவா தலையா)

சுந்தர காண்டம்:
(அனுமன் இலங்கை சென்று சீதையை
க் கண்டு வந்து ராமனிடம் சொல்லுதல்) 

ராமனை இடையிலே பிரிந்தவள் ஜானகி 
மீண்டும் நான் சேர்க்கிறேன் நான் ஒரு மாருதி 
('சொந்தங்களை வாழ்த்தி' - நிலவே மலரே)

யாரோ இவளோ ராமன் தேடிய சீதை 

('திருவளர்ச் செல்வியோ?' - ராமன் தேடிய சீதை) 

கணையாழி இங்கே, மணவாளன் அங்கே 
(கண்கள் இரண்டும்' - மன்னாதி மன்னன்)

யுத்த காண்டம்:

(போரில் ராவணனை வென்று, சீதையுடன் அயோத்தி திரும்பி மணிமகுடம் தரித்தல்)

வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வெற்றி என்று போர் முடிக்கு
ம் ஸ்ரீஜயராமன் 

அரசாள வந்த மன்னன் ராஜாராமன்
அலங்காரரூபன் அந்த சுந்தரராமன்


ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது ப்யம்?
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்


ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

குறிப்பு:  மேலே குறிப்பிட்ட பாடல்களில்,

'ஆண்மகன் வகுத்த எல்லையைக் கடந்து நடந்தாள் ராகவன் தலைவி' 
(நான் என்றால் அது அவளும் நானும் - சூரியகாந்தி), 

 'ஜானகிராமன் காட்டினில் திரிஞ்சான்
பாதியில்தானே சீதையைப்  பிரிஞ்சான் 
அவர்களைச் சேர்க்க  அனுமன் பறந்தான்'
('போடச் சொன்னால் போட்டுக்கறேன்'  - பூவா தலையா),

ராமனை இடையிலே பிரிந்தவள் ஜானகி 
மீண்டும் நான் சேர்க்கிறேன் நான் ஒரு மாருதி 

('சொந்தங்களை வாழ்த்தி' - நிலவே மலரே)

ஆகிய பாடல் வரிகளை எழுதியவர் வாலி. 

'ஜனகனின் மகளை' (ரோஜாவின் ராஜா) பாடலை எழுதியவர் புரட்சிதாசன்.

மற்ற பாடல்களை எழுதியவர் கண்ணதாசன்.

2 கருத்துகள்:

  1. அருமை நண்பரே
    இன்று தான் உங்கள் ப்ளாக் படித்தேன்
    நல்லதொரு கற்பனை அழகு தமிழ் நடை
    இந்த பதிவை உங்கள் பெரியரிட்டு பிற வலை பூக்களில் உபயோகித்து கொள்ளலாமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.உங்கள் பதிவை இன்றுதான் பார்த்தேன். நிச்சயம் உபயோகித்துக் கொள்ளலாம். நன்றி.

      நீக்கு