ஞாயிறு, 27 ஜனவரி, 2013

19. ஆயிரம் பெண்மை மலரட்டுமே



ஆயிரம் பெண்மை மலரட்டுமே
படம்: வாழ்க்கைப்படகு
பாடல்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: எம்.எஸ்.வி, பி.சுசிலா மற்றும் குழுவினர்

'ஆயிரம் பெண்மை மலரட்டுமே' பாடல் கவிஞரின் அனாயாசமான சொல் வீச்சுக்கும், மெல்லிசை மன்னரின் சளைக்காத இசை வீச்சுக்கும் ஒரு நல்ல உதாரணம்.

முழுப் பாடல் இதோ.

ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல்.. தோழி சொல் சொல் சொல்

ஒன்றே காதல் ஒன்றே இன்பம்
ஒன்றே வாழ்வின் நீதி
ஒன்றாய்ச் சேர்ந்து அன்பாய் வாழும்
பண்பே பெண்கள் ஜாதி
காதல் நாயகன் ஒரு பாதி
காதலி தானும் மறு பாதி
இருமனம் அங்கே ஒரு மனம் என்றே
சொல் சொல் சொல்.. தோழி சொல் சொல் சொல்.

மன்னவனே ஆனாலும்
பொன்னளந்து கொடுத்தாலும்
பெண் மனதை நீ அடைய முடியாது
வாள் முனையில் கேட்டாலும்
வெஞ்சிறையில் போட்டாலும்
உடல் அன்றி உள்ளம் உன்னைச் சேராது
ஆ..ஆ.ஆ....
மானும் பெண்ணும் ஒரு ஜாதி
மானம் எங்கள் தனி நீதி
தவறு செய்யாதே அருகில் வராதே
நில் நில் நில் மன்னா நில் நில் நில்

இந்தப் பாடலைக் கேட்கும்போது, கேட்பவர்களைக் கட்டிப்போட வைக்கும் ஒரு ஆற்றல் இந்தப் பாடலுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றும். 'கொஞசம் நில். இதைக் கேட்டு விட்டுப் போ!' என்று கட்டளையிடுகிற தொனியை இப்பாடலில் என்னால் உணர முடிகிறது.

நாட்டியமாடும் ஒரு பெண் தன்னைப் பற்றி உலகுக்கு அறிவிக்கும் பாடல் இது. பொதுவாக நாட்டியம் ஆடும் பெண்களை அடையப் பலர் நினைப்பது தொன்று தொட்டு நடந்து வருகிற நிகழ்ச்சி.(கதைகளிலும், திரைப்படங்களிலும் அப்படித்தானே காட்டுகிறார்கள்!) 'ஆனால் நான் அப்படி இல்லை, என்னிடம் யாரும் நெருங்க வேண்டாம்' என்று இங்கே கதாநாயகி அறிவிக்கிறாள். சாதாரணமாகச் சொன்னால் போதாது, அடித்துச் சொல்ல வேண்டும் என்று நினைப்பது போல் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார் கவிஞர்.

பாடலின் துவக்கம் ஆர்மோனிய இசையுடன் துவங்கும்போது, பாடல் வரிகளை எடுத்துக் கொடுத்திருப்பது மெல்லிசை மன்னரின் குரல். மிக இளமையாக ஒலிக்கும் அந்தக் குரல் அவருடைய பிற்காலப் பாடல்களில் ஒலித்த குரலுடன் ஒப்பிடும்போது அடையாளம் காண முடியாததாக இருக்கிறது. (ஒருவர் இது வீரமணியின் குரல் என்று You Tube இல் குறிப்பிட்டிருக்கிறார்!)

முதல் சரணத்தில் பொதுவாகப் பெண்களின் மன இயல்பைப் பற்றிச் சொல்கிற கதாநாயகி, இரண்டாவது சரணத்தில் தன்னைப் பற்றிப் பேசுகிறாள். ஒரு மன்னன் அவளை அடைய நினைக்கும்போது அவனைத் துச்சமாகப் பேசுகிறாள். மன்னன் வருவதற்கான கட்டியம் இரண்டாவது சரணத்தின் முந்தைய இடை இசையில் கம்பீரமாக அமைந்திருக்கிறது. இசைத்தட்டுகளில் இது இடம் பெறாததால் பல வருடங்களுக்க்ப் பிறகு ஒளிக்காட்சியில் இதைக் கேட்டபோது எனக்கு வியப்பு ஏற்பட்டது.

'மன்னவனே ஆனாலும்..' என்று துவங்கும் விருத்தம் இரண்டாவது சரணத்தின் துவக்கத்தில் வருகிறது. 'இதை முக்கியமாக எல்லோரும் கவனிக்கவேண்டும்' என்று அறிவிப்பதுபோல், இந்த விருத்தம், சற்றே மெதுவான நடையில், தாளப் பின்னணி இல்லாமல் தொகையறா போல் ஒலிக்கிறது. மெதுவான நடையில் வரும் இந்த விருத்தத்தை வேகமான கதியில் வரும் 'மானும் பெண்ணும் ஒரு ஜாதி. என்ற சரணத்தின் இரண்டாவது பகுதியுடன் ஒரு ஹம்மிங் மூலம் இணைதிருப்பது ('seamless fusion ) மெல்லிசை மன்னருக்கு மட்டுமே கை வந்த ஒரு கலை.

'சொல், சொல், சொல்' என்ற வரிகளின் பொருள், 'இதை எல்லோருக்கும் போய்ச் சொல்' என்பதுபோல் உறுதியுடனும், அதிகாரத்துடனும் சொல்லப்படுவதை இசை உணர்த்துகிறது.

இதே 'சொல், சொல், சொல்' வேறு இரண்டு பாடலளில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

'சொன்னது நீதானா,
சொல், சொல், சொல் என்னுயிரே .'
('சொன்னது நீதானா" - நெஞ்சில் ஓர் ஆலயம்)

இங்கே, 'நீ இப்படிச் சொல்லலாமா?' என்ற ஆதஙகமும், காயப்பட்ட உணர்வும் வெளிப்படுகிறது.

'என் மனத் தோட்டத்து வண்ணப்பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்.'
('பொன்னெழில் பூத்தது புது வானில்' - கலங்கரை விளக்கம்)
இங்கே தகவலைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு ஒலிக்கிறது.

இந்த மூன்று இடங்களையும் ஒப்பிட்டால், மெல்லிசை மன்னர் எப்படி 'சொல்'லுக்கு உயிர் கொடுக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ரகுவம்சத்தின் துவக்கத்தில் காளிதாசன், பார்வதியும் பரமேஸ்வரனும் சொல்லும் பொருளும் போல் இணைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். கவிஞரும், மெல்லிசை மன்னரும் கூட, சொல்லும் பொருளும் போல் இணைந்திருப்பதைப் பல பாடல்களில் நாம் காணலாம்.

'சொல்லின் ராஜ்ஜியம் உனது அந்த
இசையின் ராஜ்ஜியம் எனது'
என்று மெல்லிசை மன்னர் 'சொல்'லாமல் 'சொல்'லி இருக்கிறார்.

பாடலை இங்கே பார்த்தும் கேடும் மகிழலாம்

ஆயிரம் பெண்மை மலரட்டுமே


Originaaly posted in MSVTimes.com/forum  on 28th Jan, 2013.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக