ஞாயிறு, 10 மார்ச், 2013

20. காதல் என்றால்...


படம்: பாக்யலக்ஷ்மி
பாடல்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் - ராமமுர்த்தி
குரல்கள்: ஏ.எல்.ராகவன், பி.சுசீலா
நடிகர்கள்; ஜெமினி கனேசன், ஈ.வி.சரோஜா

பல்லவி 
நாயகன்: 
காதல் என்றால் ஆணும் பெண்ணூம் இருவர் வேண்டுமன்றோ?
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ?

நாயகி: 
காதல் என்றால் கடையில் வாங்கும் பொருளும் இல்லையன்றோ?
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ?

சரணம் 1 
நாயகன்: 
தூது செல்வார் எனக்காருமில்லை
சொல்வதில் முன்பின் பழக்கமில்லை
நேரடியாகவே தேடி வந்தேன்
நேரிழையே நீ அருள் புரிவாய்.

நாயகி: 
வாங்கிய பூசைகள் போதாதா?
மங்கையின் பின்னால் வரலாமா?
ஆயிரம் வேஷங்கள் போட்டாலும்
என் ஆசையும் அன்பும் கிடைக்காது

சரணம் 2 
நாயகன்: 
ஆடச் சொன்னால் நான் ஆடுகிறேன்
பாடச் சொன்னாலும் பாடுகிறேன்
பாவையே உந்தன் காதலிலே
பைத்தியம் போல் நான் ஆகி விட்டேன்

நாயகி:
காதல் பைத்தியம் பொல்லாது
கையும் காலும் நில்லாது
வாராய் எந்தன் பைத்தியமே
மனசுக்கு செய்வேன் வைத்தியமே

சரணம் 3 
நாயகன்: 
காதலைப் படைத்தவன் பேர் வாழ்க

நாயகி: 
அதைக் கண்களில் சேர்த்தவன் சீர் வாழ்க

நாயகன்: 
கடற்கரை சோலை தினம் வாழ்க

இருவரும்: 
கனிந்தோம் மகிழ்ந்தோம் நாம் வாழ்க



காதல் டூயட்டுகளில் சற்று வித்தியாசமானது இது. பாடலின் துவக்கத்தில் நாயகன் மட்டும் நாயகியைக் காதலிக்கும் ஒருதலைக் காதலாகத் துவங்கி, பல்லவியிலும், முதல், இரண்டாவது சரணங்களிலும் காதலன் தன் காதலைச் சொல்ல, காதலி அதை நிராகரித்து அவனை எள்ளி நகையாடுகிறாள். ஆனால் இரண்டாவது சரணத்தின் முடிவில் காதலி மனம் மாறுகிறாள். மூன்றாவது சரணத்திலும் இறுதிப் பல்லவியிலும் காதலி காதலனுடன் இசைந்து பாடுகிறாள்.

கவிஞரின் வரிகளில் வெளிப்படும் இந்தக் காட்சியமைப்பு, இசை வடிவமைப்பிலும் பிரதிபலிக்கிறது. முகப்பு இசையிலிருந்து துவங்குவோம். இந்த முகப்பு இசையைக் கேட்கும்போதெல்லாம் அது ஏதோ அபஸ்வரமாக ஒலிப்பதாக எனக்குத் தோன்றும். என் இசை அறிவு பூஜ்யத்துக்கும் கீழே என்பதால் என் உணர்வு தவறாக இருக்கலாம். ஆயினும் எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்.

முகப்பு இசையைக் கவனித்தால் சற்றே விசித்திரமான ஒரு தொனியில் துவங்கி (இதைத்தான் நான் ஒரு மாதிரி அபஸ்வரம் போல் தோன்றுவதாகக் குறிப்பிட்டேன்) ஒரு சில வினாடிகளிலேயே ஒருமித்த (harmonious) இசையாக மாறுகிறது. இது, காதலனின் ஒருதலைக் காதல் அபஸ்வரத்தில் துவங்கினாலும் விரைவிலேயே காதலியுடன் சுருதி சேர்ந்து இனிமையாகி விடுவதைக் காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது.

கவிஞருக்கு இது போன்ற பாடல்கள் மிக எளிதாகக் கை வரக் கூடியவை. பல்லவியில் காதலன் தன் காதலை மறைமுகமாகச் சொல்ல, காதலி 'காதல் ஒன்றும் கடைச் சரக்கல்ல' என்று சொல்லி, அவன் காதலை நிராகரிக்கிறாள்.

முதல் சரணத்தில் காதலன் தன் காதலை ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சுகிறான். காதலி 'வாங்கிய பூசைகள் போதாதா?' என்று கடுமையாகப் பேசி மறுக்கிறாள். காதலி மறுத்தபின், காதலன் ஹம்மிங் பாடுவதாக வருகிறது. இதை உற்றுக் கவனித்தால், காதலன் ஹா ஹ ஹா ஹா.. என்று ஹம்மிங் செய்வதைக் கவனிக்கலாம். இந்த ஹா ஹ ஹா அவனது மன வலியை வெளிப் படுத்துவதாக இருக்கிறது. பிறகு இது ஓஹொஹொஹொஹோ என்று மாறி, ஹம்மிங்கின் இறுதியில் காதலியும் இணைந்து கொள்கிறாள். அப்போதே அவள் மனம் சற்றே இரங்கி விட்டதாகக் கொள்ளலாம்.

இரண்டாவது சரணத்தில், காதலன் தான் காதலால் பைத்தியம் பிடித்து அலைவதாகக் கூறுகிறான். இப்போது காதலி முழுவதும் மனம் இரங்கி அவன் மனதுக்கு வைத்தியம் பார்ப்பதாகச் சொல்லி அவன் காதலை ஏற்றுக் கொள்கிறாள். காதலை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகக் காதலனை முந்திக் கொண்டு அவளே 'ஆஹ ஹா ஹா..' என்று ஹம்மிங் பாட, காதலனும் பிறகு சேர்ந்து கொள்கிறான்.

இதற்குப் பிறகு இசையில் ஒரு அற்புதத்தைக் கவனிக்கலாம். ஹம்மிங்குக்குப் பிறகு பல்லவி பாடப் படவில்லை. காதலனும், காதலியும் வெவ்வேறு பல்லவியை அல்லவா பாடியிருக்கிறார்கள்? காதலி மனம் மாறிவிட்டாலும் முழுதாக மனம் மாறிக் காதலனின் பல்லவியைப் பாடுவதாகக் காட்டினால் சற்றே prematureஆகத் தோன்றும் என்பதாலோ என்னவோ பல்லவியைத் தவிர்த்திருக்கிறார் மெல்லிசை மன்னர்.

இப்போது மூன்றாவது சரணத்துக்கு முன் வரும் இணையிசையைக் கவனித்தால். இருவர் இணைந்து போவது போன்ற உணர்வு ஏற்படும் (இது வயலின் என்று நினைக்கிறேன். ஆயினும் இசைக் கருவிகளை அடையாளம் காணும் திறமை எனக்கு இல்லை) மூன்றாவது சரணத்தில் காதலனும், காதலியும் காதலைப் புகழ்ந்து பாடுகிறார்கள். முதல் வரி காதலன், இரண்டாவது காதலி, மூன்றாவது காதலன், இறுதி வரி இருவரும் இணைந்து, என்று அழகாக வருகிறது. பிறகு காதலன் பல்லவியைப் பாட, காதலி பின்னணியில் ஹம்மிங் இசைத்துத் தன் இசைவை வெளிப்படுத்துகிறாள். பிறகு காதலன் பாடிய பல்லவியைக் காதலி திரும்பப் பாட, பாடல் நிறைவு பெறுகிறது.

ஒரு சாதாரண டூயட்டில் இவ்வளவு நுணுக்கமான அமைப்புகளை வடிவைமைத்திருப்பது மெல்லிசை மன்னரின் தனிச் சிறப்பு. இது ஒரு அருமையான, இனிமையான, அலுக்காத மெலடி. காதலன் சற்றே கோமாளித்தனமாகப் பாடும் வகையில் பாடல் வரிகள் இருப்பதால், ஏ.எல்.ராகவனின் குரலைப் பயன்படுத்தியிருகிறார் மெல்லிசை மன்னர் என்று நினைக்கிறேன். இரண்டாவது சரணத்தில், 'பைத்தியம் போல் நான் ஆகி விட்டேன்' என்று இவர் பாடுவது நாகேஷ் பாடுவது போல் தொனிக்கிறது.

இந்தப் பாடல் nsvtimes.com இன் 2010 ஆண்டு நிகழ்ச்சியி,ல் ஸ்ரீதர் நவ்ராக்ஸ் இசைக் குழுவால் பாடப்பட்டது. அப்போது இந்தப் பாடல் பற்றி ஓரிரு வரிகள் சொல்லும் வாய்ப்பை நிகழ்ச்சிஅமைப்பாளர்கள் (முரளி, வத்ஸன் மற்றவர்கள்) எனக்கு அளித்திருந்தார்கள். நேரமின்மையால், சில பாடல்கள் தொகுப்புரை இல்லாமலே இசைக்கப்பட்டன. அவற்றில் இதுவும் ஒன்று. அதனாலேயே இது பற்றி விரிவாக எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் என்னை வியக்க வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

நீங்கள் ஒரு முறை இந்தப் பாடலைக் கேட்டு விட்டு என் மனதுக்குத் தோன்றியவை எந்த அளவுக்குச் சரியானவை என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

Originally posted in msvtimes.com on 09/03/2013
_________________