வியாழன், 3 செப்டம்பர், 2015

25. ஒற்றுமையில் வேற்றுமை

ஒரே சந்தத்தில் அமைந்த பாடல்கள் பல உண்டு. மெல்லிசை மன்னரே இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். 'பேசுவது கிளியா,' 'மாம்பழத்து வண்டு,' வீடு வரை உறவு'  ஆகியவை ஒரே சந்தத்தில் அமைந்த பாடல்கள்தான். ஆனால் இவை முற்றும் வேறுபட்ட ராகங்களில்  அமைக்கப் பட்டிருக்கின்றன.

ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்த 'சின்னச் சின்ன ஆசை'யும் இதே சந்தத்தில் அமைந்ததுதான். இதே பாடலை தூர்தர்ஷனில் ஒரு பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிக்காக மெல்லிசை மன்னர் இசை அமைத்திருக்கிறார். இது ரஹ்மான் பாடல் வருவதற்கு முன்பே நடந்தது.

சரி. இப்போது மூன்று வித்தியாசமான பாடல்களை எடுத்துக் கொள்வோம்.

கன்னங் கருத்த கிளி

மனத் தோட்டம் போடுமென்று

ஜின்ஜினுக்கான் சின்னக்கிளி

மேலே கொடுத்திருக்கும் மூன்று பாடல்களையும் 'பார்த்திருப்பீர்கள்.' சில பேர் கேட்டும் இருப்பீர்கள்.ஒருவேளை  கேட்கவில்லை என்றால், தயவு செய்து மூன்று பாடல்களையும் கேட்டு விட்டுப் பிறகு தொடர்ந்து படிக்கவும்.

சரி. மூன்று பாடல்களையும் கேட்டீர்களா? இந்தப் பாடல்களுக்குள் ஏதாவது ஒற்றுமை இருப்பதாகத் தோன்றுகிறதா ? தோன்றவில்லை என்றால், மெல்லிசை மன்னரின் ரசிகராக இருப்பதற்கு நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நான் சோதனை செய்து பார்த்ததில், பெரும்பாலோர்க்கு இந்த மூன்று பாடல்களுக்குள்  ஒரு ஒற்றுமையும் இருப்பதாகத் தோன்றவில்லை.

சரி. மூன்று பாடல்களுக்குள் என்ன ஒற்றுமை? மூன்று பாடல்களும் ஒரே ராகத்தில் அமைந்தவை!

வியப்பாக இருக்கறதா?

சிவகங்கைச் சீமை படத்தில் இடம் பெற்ற 'கன்னங் கருத்த கிளி' யின் மெட்டில் 'மனத்தோட்டம் போடுமென்று' பாடலின் பல்லவியைப்  பாடிப் பாருங்கள்.

'மனத் தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல் பணத்தோட்டம் போட்டதேயடி' என்ற அடிகள் வேகமாகப் பாய்ந்து வரும். இப்போது இந்த வரிகளை இதே மெட்டில் மெதுவான வேகத்தில் பாடிப் பாருங்கள்.

இப்போது 'மனத் தோட்டம் போதுமென்று' பாடலின் வடிவம் வந்து விட்டதல்லவா?

இப்போது 'ஜின்ஜினுக்கான் சின்னக்கிளி' பாடலை 'கன்னங்கருத்த கிளி' மெட்டில் பாடிப் பாருங்கள். பிறகு அதே வேகத்தில் சற்று சோகத்தை இழைத்துப் பாடிப் பாருங்கள். இப்போது 'ஜின்ஜினுக்கான் சின்னக்கிளி'யின் வடிவம் வந்து விட்டதல்லவா?

மூன்று பாடல்களும் மூன்று வேறுபட்ட பாவங்களில் அமைந்தவை. 'கன்னங் கருத்த கிளி' காதல் வயப்பட்ட ஒரு பெண்ணை   அவ தோழிகள் கேலி செய்து பாடும் பாடல். 'மனத் தோட்டம் போடுமன்று' பாடல் (மனிதர்கள் இப்படி இருக்கிறார்களே என்ற) வருத்தத்தில் பாடப்படும் தத்துவப் பாடல். ஜின்ஜினுக்கான் சின்னக்கிளி சோகமான தொனியில் பாடப்படும் கேளிக்கைப் பாடல்.

மூன்று பாடல்களுக்கும் ஒரே மாதிரியான மெட்டுக்களை உருவாக்கிய மெல்லிசை மன்னர், பாவம், இசைக்கருவிகளின் பங்கு, தாள வேறுபாடு போன்ற பல அம்சங்களை முழுவதும் வித்தியாசமாக அமைத்து, மூன்று பாடல்களையும் சிறிதளவு கூட ஒற்றுமை தெரியாத அளவுக்கு மாற்றி அமைத்திருக்கிறார்.

'ஒன்றிலிருந்து ஒன்று வருவது இயல்புதான்' என்று மெல்லிசை மன்னர் அடிக்கடி கூறுவார். ஒன்றிலிருந்து ஒன்று வந்தாலும், அதை 'இன்னொன்றாக' மாற்றிப் புதிதாகப்  படைத்தளிக்கும் திறமை மெல்லிசை மன்னருக்கே உரித்தான  தனிச் சிறப்பு! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக