வியாழன், 11 ஆகஸ்ட், 2016

30. இதுதான் BGM!

'கற்பகம்' படத்தில் ஒரு காட்சி. ஜெமினிக்கு சாவித்திரியுடன் இரண்டாவது திருமணம் நடக்கிறது.

ஜெமினியும் அவரது முதல் மனைவி K.R. விஜயாவும் தங்கள் சொந்தக் குழந்தை போல் வளர்த்த அவரது மைத்துனர் முத்துராமனின் குழந்தை, மணமகன் ஜெமினிக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறது. 

ஜெமினியின் பக்கத்தில் மணமகள் அமர வேண்டும் என்பதற்காகக் குழந்தையின் தாத்தாவும், ஜெமினியின் மாமனாருமான S.V. ரங்காராவ் குழந்தையை எழுந்து வரச் சொல்கிறார்..

குழந்தை எழுந்து வர மறுத்ததால், ரங்காராவ் வலுக்கட்டாயமாகக் குழந்தையைத் தூக்கி வேறு இடத்தில் உட்கார வைக்கிறார். குழந்தையின் முகத்திலும், ஜெமினியின் முகத்திலும் சோகம். இதுதான் காட்சி. இதற்கு எப்படிப் பின்னணி இசை அமைத்திருக்கிறார் எம் எஸ் வி (விசுவநாதன்-ராமமூர்த்தி) என்பதைப் பார்க்கலாம்.

ஜெமினியும் பக்கத்தில் குழந்தையும் உட்கார்ந்திருக்கும்போது நாதஸ்வரத்தில் 'அலைபாயுதே' ஒலிக்கிறது. வேறு இசைக்கருவிகள் எவையும் பயன்படுத்தப்படவில்லை. 

ரங்காராவ் குழந்தையிடம் பேசுகிறார். இப்போது  நாதஸ்வர ஒலி சற்றுத் தணிந்து ஒலிக்கிறது. குழந்தை எழுந்திருக்க மறுத்ததால், ரங்காராவ் வலுக்கட்டாயமாகக் குழந்தையை அப்புறப்படுத்துகிறார். இப்போது வசனம் இல்லை. அதனால் பின்னணி இசையான நாதஸ்வரத்தின்  volume அதிகரிக்கிறது. 

இந்த இடத்தில்தான் மெல்லிசை மன்னர் தனது மேஜிக்கை அரங்கேற்றியிருக்கிறார்.

இசை அமைப்பாளருக்கு இங்கே இரண்டு சவால்கள். ஒன்று குழந்தையின் சோகத்தைக் காட்டும் விதத்தில் பின்னணி இசை அமைய வேண்டும். ஆனால் திருமணக்காட்சியில் சோக இசை ஒலித்தால் பொருத்தமாக இருக்காது.

இரண்டாவது, நாதஸ்வரக்கலைஞர் கானடா  ராகத்தில் ஒரு பாடலை வாசித்துக் கொண்டிருக்கிறார். சில வினாடிகளுக்குள் அவர் வேறொரு ரகத்தை வசிப்பதாகக் காட்ட முடியாது. 

இரண்டு சவால்களையும் ஒருங்கே சமாளித்து அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார் எம் எஸ் வி. எப்படி?

நாதஸ்வரத்தின் volume அதிகரிக்கும்போது அதே கானடா ரகம்தான் ஒலிக்கிறது. முன்பு ஒலித்த பாடலின் தொடர்ச்சியாகத்தான் ஒலிக்கிறது. ஆனால் இப்போது நாதஸ்வரத்தில் வருவது 'ஏ ஏ ஏ...' என்ற ஆலாபனை. கானடா ரக ஆலாபனைதான். கானடா ராகத்தில் அமைந்த 'முல்லை மலர் மேலே' பாடலில் 'மின்னல் உருமாறி மண் மேலே கன்னியைப் போலே' என்ற வரிக்குப் பின்னால் இதே போன்ற ஆலாபனை வருவதைக் கேட்கலாம். அந்தப் பாடலில் இந்த ஆலாபனை ஆனந்தமான தொனியில் ஒலிக்கும். ஆனால் இங்கே அது தனியாக ஒலிக்கும்போது, அதில் சோகமான தொனி ஒலிப்பதைக் கவனிக்கலாம்.

முதலில் ஆனந்தமாக ஒலித்த அதே பாடலின் தொடர்ச்சியாக ஆனால் சோகமாக ஒலிக்கும் வண்ணம் இந்த ஆலாபனையைச் சேர்த்திருப்பது வியக்க வைக்கிறது.

குழந்தைகள் காப்பகத்தில் பல குழந்தைகளும் சேர்ந்து அலறுவது போல் பல வயலின்களை மொத்தமாக அலற விடுவதையெல்லாம் 'ஆஹா இதுவல்லவோ பின்னணி இசை' என்று விழுந்து விழுந்து பாராட்டும் மேதாவி விமரிசகர்களும், ரசிக ஞானிகளும் இது போன்ற அற்புதமான பின்னணி இசையின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில் 0;30 முதல் 1:30 வரை மெல்லிசை மன்னரின் பின்னணி இசை மாஜிக்கைக் கண்டும் கேட்டும் ரசிக்கலாம்.