வெள்ளி, 10 மார்ச், 2017

32. காலமிது, காலமிது


சித்தி படத்தில் இடம் பெறும் 'காலமிது, காலமிது' எப்போது கேட்டாலும் என் மனதைப் பிசையும் பாடல்.  சித்தி படத்தைப் பல ஆண்டுகள் கழித்துத்தான் தொலைக்காட்சியில் பார்த்தேன். பாடலை அதற்கு முன் பல முறை வானொலியில் கேட்டு விட்டேன்.

பல சமயம் இப்பாடலை இரவு  10.30அல்லது 11 மணிக்கு மேல் சென்னை வானொலியில் ஒலிபரப்புவார்கள். அதைக் கேட்டபின் 'கண்ணுறக்கம் ஏது?' உறங்கக்கூட நேரமில்லாத பெண்களின் நிலையை இதை விட உருக்கமாக உலகில் வேறு எந்தக் கவிஞரும் சொல்லியிருக்க முடியாது!

பொதுவாகப் பெண்கள் ஓய்வின்றி உழைக்கிறார்கள் என்ற ஒரு இரக்க சிந்தனை என்னிடம் உண்டு. (என் மனைவி இதை ஒப்புக்கொள்வாரா என்பது எனக்குத் தெரியாது!) அதனாலேயே இந்தப் பாடலின்மீது எனக்கு ஒரு ஒட்டுதல் ஏற்பட்டு விட்டது என்று கூறலாம்.

ஒரு நண்பர் சுட்டிக் காட்டியது போல, ஒரு இடத்தில் இடையிசை கொஞ்சம் வேறுபட்டிருக்கிறது.  பத்மினி நின்றபடியே ஒரு முறை சுற்ற, குழந்தையும் அதுபோல் சுற்றும். இந்தச் செய்கையைக் காட்டும் விதமாகத்தான் இந்த இசை வேறுபாடு என்று நினைக்கிறேன். ரீ ரிகார்டிங் போல இதை எப்படி மெல்லிசை மன்னர் அமைத்தார்  என்பது வியப்பாக இருக்கிறது.

பாடல் காட்சியை இயக்குனர் முழுவதுமாக முன்பே தீர்மானித்து மெல்லிசை மன்னரிடம் விளக்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.(வேறு சில பாடல்களில் இந்த 'முரணை' கவனித்திருக்கிறேன். 'ஆயிரத்தில் ஒருத்தியம்மா, ' ;நாடு அதை நாடு' பாடல்களிலும் இசை கொஞ்சம் திசை மாறிப் போவது போல் இருக்கும். முந்தைய பாடலில் எஸ் எஸ் ஆரின் அதிர்ச்சியையும், பிந்தைய பாடலில் சரோஜா தேவிக்கு நடக்கும் கண் அறுவைச் சிகிச்சையையும்  சித்தரிக்கவே இந்த வேறு பட்ட இசைப் பகுதிகள் என்பது பாடல் காட்சிகளைப் பார்த்தால்தான் விளங்கும்!)

"மாறும், கன்னி மனம் மாறும்' என்ற இடத்தில் இசை மாறுவதை கவனியுங்கள். 'மாறும்' என்ற வார்த்தையைக் குறிப்பதாகவே இந்த இசை மாற்றம். இரண்டு வரிகளுக்குப் பிறகு மீண்டும் முந்தைய சரணத்தின் ராகத்தில் போய் இணைந்து விடும் அழகை என்னவென்று சொல்வது!

பாடலின் இறுதியில்,

'கை  நடுங்கிக்  கண் மறைந்து காலம் வந்து தேடும்.
'காணாத உறக்கமெல்லாம் தானாகச் சேரும்'

என்ற வரி ஆழ்ந்த சோகக் கருத்தை உள்ளடக்கியது. முதுமையில் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் வீழ்ந்திருக்கும்போதும், மீளாத் துயிலுக்கு ஆட்படும்போதுதான் ஒரு பெண்ணுக்கு உறங்க வாய்ப்புக் கிடைக்கும் என்ற உண்மை எவ்வளவு மனவலியை அளிக்கக் கூடியது!

இந்த வரியின்போது சுந்தரிபாய் உட்கார்ந்து கொண்டே தூங்குவது போல் காட்டி இந்த வரியின் ஆழ்ந்த பொருளை மங்கச் செய்து விட்டார் இயக்குனர் திலகம் என்பது என் பணிவான கருத்து. ஒரு வேளை இந்தப் படத்தை வந்த புதிதிலேயே நான் பார்த்திருந்தால் இந்த ஆழமான பொருள் எனக்குத் தோன்றாமலேயே போயிருக்கும்!

இந்தக் காலத்திலும் ஆழ்ந்து ரசிக்கக்கூடிய மிக அருமையான பாடல் இது.

பாடல் வரிகள் இதோ:

தொகையறா
பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கமில்லை
என்னரிய  கண்மணியே!
கண்ணுறங்கு கண்ணுறங்கு

பல்லவி
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

சரணம் 1 
நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளு தமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி
தீராத தொல்லையடி

சரணம் 2
மாறும் கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும்போது
தூக்கமென்பதேது?
தான் நினைத்த காதலனைச்
சேர வரும்போது
தந்தை அதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது,
கண்ணுறக்கம் ஏது?

மாலையிட்ட தலைவன் வந்து
சேலை தொடும்போது
மங்கையரின் தேன்நிலவில்
கண்ணுறக்கம் ஏது,
கண்ணுறக்கம் ஏது?

சரணம் 3
ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும்போதும்
அன்னையென்று வந்த பின்பும்
கண்ணுறக்கம் போகும்,
கண்ணுறக்கம் போகும்,

கைநடுங்கிக் கண் மறைந்து
காலம் வந்து சேரும்
காணாத தூக்கமெல்லாம்
தானாகச் சேரும்,
தானாகச் சேரும்!




1 கருத்து: