ஞாயிறு, 20 மே, 2018

41. நான் வாழ்க!

கவிஞர்-மெல்லிசை மன்னர் கூட்டணியில் முதலிரவுப் பாடல்கள் எத்தனையோ உண்டு.  ஒவ்வொரு பாடலிலும் புதிதாக எதைச் சொல்வது என்பது கவிஞருக்கு ஒரு சவால்தான்.

1965ஆம் ஆண்டு வெளியான 'ஆனந்தி' படத்தில் இடம் பெற்ற 'உன்னை அடைந்த மனம் வாழ்க' என்ற பாடலில் கவிஞர் ஒரு புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம் பெறவில்லை எனினும், பாடல் வரிகளின் பொருளைக் கொண்டு இது ஒரு முதலிரவுப் பாடல் என்று தீர்மானிக்கலாம்.

இங்கே நாயகி முதலில் தன்னை வாழ்த்திப் பாடுகிறாள். தனது வாழ்வு வளமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்திக் கொள்கிறாள். பிறகு கணவனிடம் சில கோரிக்கைகளை வைக்கிறாள். (In fact she makes quite a few  demands of her husband)

பல்லவி
உன்னை அடைந்த மனம் வாழ்க - இனி
ஒவ்வொரு இரவும் வாழ்க
இந்த மஞ்சம் உன் நெஞ்சில் தேனாக
நல்ல வாழ்வும் வளமும் மலர்க!

'உன்னை அடைந்த மனம் வாழ்க' - அதாவது என் மனம் வாழ்க அல்லது நான் வாழ்க! ஒருவர் தன்னைத் தானே வாழ்த்திப் பாடிக் கொள்கிற பாட்டு இது ஒன்றாகத்தான் இருக்கும்! 'உன்னை' என்று ஆரம்பித்து இன்னொருவரை (கணவனை) வாழ்த்துவது போல் போக்குக்காட்டி, எவ்வளவு சாமர்த்தியமாகத் தன்னையே  வாழ்த்திக் கொள்கிறாள்!

'இனி ஒவ்வொரு இரவும் வாழ்க' -  ஒரு நாள் முழுவதும் நாம் மகிழ்ச்சியாக இருந்தோமா  இல்லையா என்ற சிந்தனை அன்று இரவுதானே  நமக்கு வரும்? ஒவ்வொரு இரவும் வாழ்க என்று இரவை வாழ்த்துவது போல், ஒவ்வொரு நாளும் தன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மீண்டும் தன்னை வாழ்த்திக் கொள்கிறாள் இந்த நாயகி.

சரணம் 1
சிறு  மஞ்சள் கொஞ்சும் மயில் உன்னைத் தஞ்சம் என்று வந்தாள்  உன்னுடன் மகிழ,
நடை அஞ்சும் பெண்ணின் நெஞ்சில் வஞ்சம் என்றும் இல்லை மன்னா காத்தருள் புரிக
தினம் உன்னால் என் சுகம் வளர்க
இனி என்னால் உன் நிலை உயர்க

சரணத்தில் கவிஞர் அடுக்கடுக்காக வார்த்தைகளை அள்ளி வீச, மெல்லிசை மன்னர் சளைக்காமல் அனாயசமாக அத்தனை வார்த்தைகளையும் தன் ட்யூனுக்குள் அடக்கியிருக்கிறார். சுசீலாவுக்குத்தான் சற்று அதிகம் பயிற்சி தேவையாயிருந்திருக்கும்!

பொருள்:
நான் உன்னைத் தஞ்சம் என்று வந்திருக்கிறேன்
அஞ்சி அஞ்சி நடக்கும் என் நெஞ்சில் வஞ்சம் இல்லை
உன்னால் நான் சுகமடைய வேண்டும் (என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது உன் பொறுப்பு!)
நான் வந்து விட்டேன் இல்லையா? இனிமேல் உனக்கு யோகம்தான்!

சரணம் 2
எந்தன் தந்தை என்னை உந்தன் கையில் பிள்ளை என்று
தந்தார் தன் மனம் கனிய
இந்தப் பிள்ளை தன்னை உந்தன் அன்னை என்னும் உள்ளம்
தன்னால் காத்தருள் புரிக
குறை இல்லாத வாழ்வொன்று அருள்க
துணை என்னோடு நீ கொள்ள வருக

பொருள்:
என் அப்பா ஒரு குழந்தையை ஒப்படைப்பது போல் என்னை உன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்.
ஆனால் உன் அம்மாவை எப்படிப் பார்த்துக் கொள்வாயோ, அப்படி நீ என்னைப்  பார்த்துக்கொள்ள வேண்டும்.
நீ எனக்கு எந்தக் குறையையும் வைக்கக் கூடாது.

கடைசி வரி 'துணை என்னோடு நீ கொள்ள வருக' என்று இருக்கிறது. 'நான் மேலே சொன்ன விஷயங்களை மனதில் கொண்டு என்னை உன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்' என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.

'துணை என்னோடு நீ கொள்ள வருக' என்பதற்கு 'நம் முதலிரவைத் துவங்கலாம்' என்று நாசூக்காகச் சொல்வதாகவும் பொருள் கொள்ளலாம்!

இரண்டாவது சரணத்தின் இறுதியில் வரும் ஹம்மிங் நாயகி தன் முழுத்  திருப்தியை வெளிப்படுத்தும் ஒரு ஹம்மிங். பற்பல பாடல்களில், உணர்ச்சிகளுக்கும், கதாபாத்திரங்களின் மனநிலைக்கும் ஏற்ப  ஹம்மிங்கில்தான் மெல்லிசை மன்னர் எத்தனை வேறுபாடுகளைக் காட்டியிருக்கிறார்!

அற்புதமான கவிதை வரிகளுக்கு அலாதியான ஒரு இனிமையுடன் கூடிய வித்தியாசமான டியூனில் அமைக்கப்பட்டுள்ள இசை!

அதிகம் கேட்கப்படாத  இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் எனக்கு மனதில் ஒரு அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். அதுவும் அந்த ஹம்மிங்கைக் கேட்டால் எனக்கே வாழ்க்கையில் முழுத் திருப்தி ஏற்பட்டு விட்டது போன்ற மனநிலை ஏற்படும்.

கவிஞர், மெல்லிசை மன்னர் என்ற இரண்டு சித்தர்கள் சேர்ந்து உருவாக்கிய அபூர்வமான பாடல் இது.

இந்தப் பாடல் பற்றிய என் காணொளி;



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக